சசிகலாவுடன் திடீர் சந்திப்பு! - கஜானா சாவியை கைப்பற்றும் தினகரன்?

நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார்.

'இந்த சந்திப்பில் நிதி விவகாரம் தொடர்பாக பேச்சு நடக்க இருக்கிறது' என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, காதுவலி மற்றும் சகோதரரின் உடல்நலிவு காரணமாக பரோல் விடுப்பில் சென்னை வந்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் பேரக்குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்ததோடு, தீபாவளி கொண்டாட்டத்தையும் முடித்துவிட்டு ஜெயிலுக்குள் சென்றுவிட்டார். இந்த சமயத்தில் அவர் தன்னுடைய மகன், மகள், பேரக்குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் சந்திப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

அவர் யாரையும் சந்திக்கிறாரா என்பதையும் தன்னுடைய ஆட்கள் மூலம் கவனித்து வந்தார் தினகரன். பெரிதாக எந்த சர்ச்சையும் தென்படாததால் அமைதியாக இருந்துவிட்டார். அதே நேரத்தில் சசிகலாவின் கஜானா சாவிகள், இளவரசி குடும்ப ஆட்களிடம் சிக்கிக் கொண்டிருப்பதை தினகரன் வெறுப்போடு கவனித்து வருகிறார்.

ஜெயா டி.வி, மிடாஸ், கொடநாடு எனப் பணம் கொட்டக் கூடிய நிறுவனங்கள் எல்லாம் விவேக்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எதாவது பண உதவி வேண்டும் என்றால்கூட, விவேக்கிடம்தான் தினகரன் போய் நிற்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பலமுறை போராடியிருக்கிறார் தினகரன்.

'அந்தப் பையன் கணக்கு வழக்கில் சரியாக இருக்கிறான். அவனே பார்க்கட்டும்' என்பது சசிகலாவின் முடிவாக இருப்பதால், கடுப்புடனேயே கவனித்து வருகிறார் தினகரன். இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விவேக்கைப் பற்றிய தகவல்களையும் சசிகலாவிடம் காட்டி வருகிறார். ஆனாலும், தினகரனின் பாட்சா பலிக்கவில்லை.

இப்போது பிப்ரவரி மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், தேர்தல் பணிகளுக்காக நிதி தேவைப்படுகிறது. இதையே காரணம் காட்டி, கஜானா சாவியைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். இதற்காகத்தான் இன்று பெங்களூரு சிறையில் சந்திக்கச் சென்றார்.

'தினகரனின் முயற்சிகளுக்கு சசிகலா செவிசாய்த்துவிட்டால், இளவரசி குடும்பத்தினரின் ஆட்டம் அடங்கிவிடும்' என நினைக்கின்றனர் சொந்த பந்தங்கள். இன்றைய சந்திப்புக்குப் பிறகே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரிய வரும்.

- அருள் திலீபன்

More News >>