கஜா புயல் பாதிப்பு: தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் தமிழக ஆளுநர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது ஒரு மாத சம்பள பணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கஜா புயல் தாக்கத்தால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. கஜா புயல் வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும், மக்கள் இன்னும் மீளா துயரத்தில் தான் இருக்கின்றனர். தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகள் முதல் தென்னை மரங்கள், வாழைத்தோப்புகள், பயிர்கள் என மொத்தமும் நாசமாயின. இதனால், விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வலர்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். பலர், அத்தியவசியப் பொருட்களாகவும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.