விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானம் பறக்கவே லாயக்கற்றதாம்!
இந்தோனேஷியாவில், விபத்துக்குள்ளான விமானம், பறப்பதற்கு தகுதியற்றது என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-0 8 ரக விமானம் கடந்த அக்டோபர் 29- ம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு சென்றது. இதில் ஊழியர்கள் உட்பட 188 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட தேடலுக்கு பின் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேஷிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுஅதிகாரிகள் விபத்து நேர்ந்தது பற்றி ஆய்வு செய்து அதன் முதற்கட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில்,'' விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக மேற்கொண்ட பயணத்தின்போதே, இந்த விமானத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தன. அதையும் மீறி, அந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது.
அதை இயக்கியிருக்கக் கூடாது; பறப்பதற்கு அந்த விமானம் தகுதியற்றது. விமானம் புறப்பட்ட, 13- வது நிமிடத்திலேயே, ரேடாருடனான தொடர்பை இழந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு உள்ளதால், ஜகார்த்தாவுக்கு திரும்பும்படி உத்தரவிட்டும், அதை செய்ய முடியாமல், விமானிகள் திணறியுள்ளனர். விமானத்தை விமானிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
விமானிகள் பேசியது, கடைசியாக விமானத்தில் நடந்தது தொடர்பான தகவல்களை உள்ளடக்கியிருக்கும் வாய்ஸ் பாக்ஸ் கிடைக்கவில்லை. அது கிடைத்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.