பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு!
கஜா பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயலால் வீடுகளை இழந்தோருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கஜா புயல் தாக்கத்தால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது. கஜா புயல் வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும், மக்கள் இன்னும் மீளா துயரத்தில் தான் இருக்கின்றனர். தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகள் முதல் தென்னை மரங்கள், வாழைத்தோப்புகள், பயிர்கள் என மொத்தமும் நாசமாயின.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். நிவாரண நிதி அறிவித்ததோடு, நிவாரண பொருட்களையும் வழங்கினர்.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்து 3 நாட்கள் தங்கியிருந்து புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார். ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்த அவர் அங்கிருந்து வேதாரண்யம் சென்று கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, பொதுமக்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,'' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் கார்ப்பீடு தொகையை தமிழக அரசு செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிவாரண தொகையில் காப்பீடு தொகையை பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.