சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல்!
நடிகர் சிவகார்த்திகேயன் 'கனா' படத்தை தொடர்ந்து தயாரிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
பரிவட்டம் கட்டி புதுப் படத்துக்கு பூஜை போடும் ஸ்டைலை பின்பற்றி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தொடர்ந்து, யூடியூப் சேனலான பிளாக் ஷீப் குழுவுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார்.
'ஸ்மைல் சேட்டை' எனும் பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் பிளாக் ஷீப் என தனி சேனலை நடத்தி வருகின்றனர். கார்த்திக் வேணுகோபாலன் தான் இந்த புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சேட்டையன் கார்த்திக் என பலரும் அறிந்த இவரது படைப்பில் உருவாகப்போகும் புதிய படத்தில் நாயகனாக சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் கடைசி சரவணனாக நடித்த வி.ஜே. ரியோ தான் நடிக்கிறார். நாயகியாக கன்ச்வால் ஷிரின் என்பவர் நடிக்கிறார். 'மீசையை முறுக்கு' படத்தை தொடர்ந்து விக்னேஷ்காந்த் இந்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேலும், அந்த பிளாக் ஷீப் பட்டாளமே படத்தில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. சிவகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.