பெண்கள் பாதுகாப்புக்காக விசேஷ செயின்: விரைவில் அறிமுகம்!
ஆபத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்றும் வகையில், எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மகாராஷ்டிர மாநிலம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் பிறரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைகின்றனர்.
பெண்கள் கடத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, பதில் அளித்த உள்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் விசேஷ செயின் குறித்து கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் ஆபத்தான சூழலில் இருக்கும்போது பயன்படும் விசேஷ செயின் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஜிபிஎஸ் சிப், எச்சரிக்கை பொத்தானும் பொருத்தப்பட்ட இந்த விசேஷ செயினை மகாராஷ்டிரா அரசு விற்பனைக்கு கொண்டு வரும். இதன் விலை ரூ.1000 அல்லது அதற்கு குறைவாக இருக்கும். பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஆபத்தில் இருக்கும்போது, செயினில் உள்ள பொத்தானை அழுத்தி, பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை உஷார்படுத்தலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்படும் கண்காணிப்பு அறை மூலம் பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து அவரை மீட்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.