நாகர்கோவில் குளக்கடை பஜாரில் பயங்கர தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள குளக்கடை பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மத்திய பகுதியில் கோட்டார் குளக்கடை பஜார் உள்ளது. இங்கு, பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள். தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில், பஜாரில் உள்ள ஒரு கடையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இருப்பினும், 5 கடைகளில் தீ பரவி அதில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. இதனால், ரூ.15 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் தீக்கு இரையாகி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.