ஆட்டோ தீப்பிடித்ததில் சிறுவர்கள் உள்பட 3 பேர் பரிதாப பலி
மும்பை: அவுரங்காபாத்தில் திடீரென ஆட்டோ ரிக்ஷாவில் தீ பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள அகமது நகர் சந்தா என்ற பகுதியில் இருந்து ஆட்டோ ஒன்று சவாரி ஏற்றிக் கொண்டது. ஆட்டோவில், அதே பகுதியை சேர்ந்த நமிரா குரேஷி(8), மகேவிஷ் குரேஷி(7) மற்றும் ஜூனத் குரேஷி(55) உள்பட சிலர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், நடுவழியில் ஆட்டோவில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. ஆட்டோ ஓடிக்கொண்டு இருந்ததால் காற்றில் தீ வேகமாக பரவியது. ஆட்டோவில் இருந்தவர்களுக்கு தீப்பிடித்துக் கொண்டதை உணர்வதற்குள் தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பரவியது.
இதனால், வெளியில் தப்பிக்க முடியாமல் பயணம் செய்தவர்களில் மேற்படி கூறப்பட்ட மூன்று பேரும் தீக்கு இரையாகினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.