தமாகா நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை: மணல் கொள்ளையர்கள் வெறிச்செயல்
மணல் கொள்ளையை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரமடைந்து தமாகா நிர்வாகியை ஓட ஓட விரட்டி வெடிக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (52). விவசாயியான இவர், பென்னாகரன், வட்டார த.மா.கா தலைவராகவும் இருந்தார். இவர், தினமும் மாடுகளை மேய்த்து, அதிகாலையில் வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து வருவது வழக்கம்.அந்த வகையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் ஒகேனக்கல் பகுதியில் பால் விற்பனை செய்வதற்காக கணேஷ் இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒகேனக்கல் பழைய தபால் நிலையம் அருகே கணேஷ் வந்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் கணேசை வழிமறித்துள்ளனர். பின்னர், அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளதை கவனித்த கணேஷ் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், கணேஷை துரத்திச் சென்ற மர்மநபர்கள், கணேஷின் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.இதில் படுகாயமடைந்த கணேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதன்பிறகு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கணேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து கொலை செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், முதற்கட்டமாக, ஒகேனக்கல், பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் காவிரிக்கரையோரங்களில், அஞ்செட்டி, பென்னகரன் உள்ளிட்ட பகுதியை சேரந்த மணல் கொள்ளையர்கள் லாரி, டிராக்டர், குழுதைகளில் மணல் திருடி வருகின்றனர்.
இதுகுறித்து கணேஷ் போலீசிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், கணேசை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.