2வது நாளாக தொடரும் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நவம்பர் மாதம் 29ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. அதன்படி, நேற்று போராட்டம் நடைபெற்று இன்று இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தனர்.

இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து திரண்ட விவசாயிகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். இதில், தமிழகத்தில் இருந்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி சென்று பேரணியில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் பேரணியையொட்டி, சுமார் 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>