மீண்டும் சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஜ.ஜி.பொன் மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகள் காணாமல் போயின. இது குறித்து வக்கீல் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
தற்போது சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க இன்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஓரு வருட காலத்திற்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார்என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.