ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு விஜய் சேதுபதி கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விடுதலை அளிக்க வேண்டி ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், சமீபத்தில், 2000ஆம் ஆண்டு தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற மூவரை விடுதலை செய்ய கவர்னர் உத்தரவு அளித்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் மூலம், எழுவர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு மனித உரிமை பிரச்சனை. இத்தனை ஆண்டுகள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது போதும். அவர்களின் விடுதலை குறித்து உடனடியாக முடிவெடுங்கள் சார் என ஆளுநருக்கு அழுத்தமான கோரிக்கையை நடிகர் விஜய்சேதுபதி வைத்துள்ளார்.

மேலும், அந்த ஹேஷ்டேகை பலரும் டிரெண்டாக்கி வருகின்றனர். இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷும் தனது கோரிக்கையை வைத்துள்ளார்.

More News >>