முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: அதிகபட்ச சகிச்சை தொகை நாளை முதல் அமல்
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏராளமான பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.பிறந்த குழந்தை முதல், முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் தரமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் செய்துக் கொள்ள முடியும். அதுவும், தனியார் மருத்துவமனைகளில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.