இனி பவாருக்கு பவர் இல்லை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜுடன் மோதலில் ஈடுபட்ட ரமேஷ் பவாரின் பதவிக் காலம் முடிந்தது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டி வரை அசத்தல் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி வெளிப்படுத்தி வந்தது. நட்சத்திர ஆட்டக்காரரான மிதாலி ராஜ், சிறப்பாக ஆடி வந்தார்.
ஆனால், அரையிறுதி போட்டியில், அவரை ஆடவிடாமல் மகளிர் அணிக்கான தற்காலிக கோச் ரமேஷ் பவார் இடையூறு செய்தார். இதன் விளைவாக அந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழையாமல் வரலாற்று சாதனையை இம்முறையும் தவறவிட்டு தாயகம் திரும்பியது.
இந்நிலையில், ரமேஷ் பவாரால் தான் அரையிறுதிப் போட்டியில் தான் இடம்பெறவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டை மிதாலி ராஜ் முன்வைத்தார். இதற்கு போட்டியாக மிதாலி ராஜ் மீது ரமேஷ் பவாரும் அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தினார்.
மிதாலி ராஜ் சொந்த சாதனைக்காகவே விளையாடுகிறார். அணியின் ரகசியங்களை புரிந்து கொள்ளவில்லை என அவர் கூறினார். ஆனால், அது உண்மையாக இருந்திருந்தால், வெற்றி ரகசியம் அவர் ஆடாமல் இருந்த போது இந்தியாவிற்கு வெற்றியை ஏன் ஈட்டித் தரவில்லை என்ற கேள்விகள் பல தரப்பிலிருந்து எழுந்தது.
இந்நிலையில், ரமேஷ் பவாரின் மூன்று மாத கால தற்காலிக பயிற்சியாளர் பதவி இன்றுடன் முடிந்தது. புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்பவும் பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
மேலும், பவார் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவந்துள்ளது.