பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உதவிய கவர்னர்

அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவும் வகையில், தனது ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மாநில கவர்னரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சல பிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா. முன்னாள் ராணுவ அதிகாரியான இவர் நேற்று தவாங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, இந்நிகழ்ச்சியை காண கலந்துக் கொண்ட நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அப்பெண் குறித்து கவர்னருக்கு தெரியவந்துள்ளது. இதனால், தான் வந்த ஹெலிகாப்டரில் அப்பெண்ணையும் அவரது கணவரையும் ஏற்றிக் கொண்டு இடா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க விரைந்தனர்.

ஆனால், செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைந்ததை அடுத்து, தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பிய பிறகு, ஹெலிகாப்டர் இயக்குவதில் திடீர் தடை ஏற்பட்டது. சோதனை செய்து பார்த்ததில், ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

பெண்ணிற்கு பிரசவலி அதிகமானது. இதனால், தேஜ்பூர விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கவர்னர் உடனடியாக விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்து, கர்ப்பிணியையும், கணவரையும் அழைத்துக் கொண்டு இடா நகருக்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.

இடா நகரில் ஆன்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் கர்ப்பிணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அப்பெண்ணிற்கு அழகான மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறந்தது.

பெண்ணிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கவர்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். கர்ப்பிணி பெண்ணிற்கு சரியான நேரத்தில் உதவிய கவர்னரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பல தரப்பில் இருந்தும் கவர்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News >>