திறக்கட்டும் ஆளுநர் மாளிகை கதவுகள்! - எழுவர் விடுதலைக்காகப் போராடும் திரையுலகம்-Exclusive
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கான பணிகளில் தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் எனப் பலரது கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள். தற்போது ஆளுநர் பெயரை முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் சினிமா பிரபலங்கள்.
#28yearsenoughgovernor என்ற பெயரில் இன்று காலையில் இருந்தே பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ` இது தமிழர்கள் தொடர்பான பிரச்னை மட்டும் அல்ல. மனித உரிமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏழு பேர் விடுதலையை கருணையோடு அணுகுங்கள் ஆளுநர். இப்போதாவது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுங்கள்' எனக் கூறியிருந்தார். அதேபோல், திரைப்பட இயக்குநர் ராம் தன்னுடைய பதிவில், ' திறக்கட்டும் கதவுகள். கவர்னரைச் சென்றடையும் வரையில் பதிவுகள் இடுவோம்' எனக் கூறியிருக்கிறார்.
இந்த ஹேஷ்டேக் பற்றிப் பேசும் தமிழ் ஆர்வலர்கள், ' 28 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் சிறையில் வாடுகின்றனர். இவர்களை விடுதலை செய்வதற்காகப் பலகட்டப் போராட்டங்களை நடத்திவிட்டோம். எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கடந்த ஆண்டு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம். அப்போதுதான், தானாக முன்வந்து ஏழு பேர் விடுதலைக்குக் குரல் கொடுத்தார் விஜய் சேதுபதி. அந்தநேரத்தில், நாங்கள் கேட்காமலேயே பேரணிக்கு பொருள் உதவியும் செய்தார் இயக்குநர் இரஞ்சித். எங்கள் போராட்டங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
இந்தநேரத்தில், மாணவிகள் எரிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று அதிமுகவினரை விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஆளுநர். ஆனால், ஏழு பேர் விடுதலைக்காக அவர் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. இது எங்களுக்கு வேதனையை உருவாக்கியது. இனியும் தாமதிக்கக் கூடாது என்பதால்தான் இப்படியொரு ட்ரெண்ட்டை சமூக ஊடகங்களில் உருவாக்கினோம். டெல்லியின் காதுகளை இந்த ஹேஸ்டேக் எட்டும் என உறுதியாக நம்புகிறோம்' என்கின்றனர் எதிர்பார்ப்போடு.
-அருள் திலீபன்