அமைச்சரின் அநாதைகள் பேச்சைக் கண்டித்தால் வழக்கா? மிரண்டுபோன ராமேஸ்வரம் மீனவர்கள்

மீனவர்களை அநாதைகள் என்று பேசிய அமைச்சர் மணிகண்டனை விமர்சித்த மீனவர்கள் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது. ' அமைச்சர் பேச்சைத் தட்டிக் கேட்டதால் என் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது' என ஆவேசப்படுகிறார் பாரம்பரிய மீனவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி.

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் மீனவர்கள். ராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் மணலைத் திருட்டுத்தனமாக அள்ளி வந்தனர் சிலர்.

இவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள். இந்த சட்டவிரோத திருட்டைக் கண்டித்து மீனவர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர். இதன் அடிப்படையில் மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகளும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினர்.

இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் மணிகண்டன், கடந்த வாரம் பாம்பனில் நடந்த ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில், வானத்தில் இருந்தா மணல் கொட்டுகிறது. மணல் எடுத்தால் யாருக்கு என்ன பிரச்னை? இதற்குக் காரணமானவர்களை அவ்வளவு எளிதில் விட மாட்டேன்' எனத் திட்டித் தீர்த்துவிட்டார்.

அதிலும், மீனவர்கள் அநாதைகள் எனப் பொருள்படும்படி பேசிவிட்டார். இந்தப் பேச்சு ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் நிர்வாகி சின்னத்தம்பி, ' பாம்பன் நிகழ்ச்சியில் மீனவர்கள் அனாதைகள் என்று கூறி மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசிய அதிமுக அமைச்சர் மணிகண்டன், மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு மீனவர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைப் பற்றிப் பேசிய மீனவர்களும், ' மணல் அள்ளுவதில் லோடுக்கு இரண்டாயிரம் ரூபாய் அமைச்சர் தரப்புக்குச் சென்று கொண்டிருந்தது. இதன்மூலம் வந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு, மீனவர்கள் தடை போட்டுவிட்டனர். அந்தக் கோபத்தைத்தான் பாம்பன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் அமைச்சர்' என்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் மணிகண்டனை விமர்சித்த சின்னத்தம்பி மீது ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சின்னத்தம்பி, ' மீனவர்களைக் கொச்சைப்படுத்தியும் கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சரை விமர்சனம் செய்ததற்காக என் மீது வழக்குப் பதிவு (எண்:78/2018) செய்யப்பட்டுள்ளது' என கூறியிருக்கிறார்.

 

More News >>