2.0 பார்க்க இயக்குநர் அனுமதிக்கவில்லை நடிகை புலம்பல்!
இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன், 2.0 படம் பார்க்க தன்னை இயக்குநர் அனுமதிக்கவில்லை என வருத்தத்துடன் ட்விட்டரில் புலம்பியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் ரஜினி – அக்ஷய் குமார் நடிப்பில் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ள 2.0 படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
நேர்த்தியான 3டி மற்றும் 4டி சவுண்ட் என ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளதாக பார்த்தவர்கள் அனைவரும் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளி வரும் அதே வேளையில், ஷூட்டிங்கிற்கு மட்டம் போட்டு விட்டு படத்தை பார்க்க எங்கள் இயக்குநர் அனுமதிக்கவில்லை. ஷூட்டிங் முடிந்த பின்னர் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என கல்யாணி ப்ரியதர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கல்யாணி தற்போது கிஷோர் திருமலா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் ஜோடியாக சித்ராலஹரி எனும் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.