போலி கணக்கு காட்டி லம்ப்பாக சுருட்டிய தினகரன் ஸ்லீப்பர் செல்- அதிர்ச்சியில் இளவரசி குடும்பம்- Exclusive
சொத்துக்குவிப்பு வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர் சசிகலாவும் இளவரசியும். சிறைக்குள் இருந்தபடியே கணக்கு வழக்குகளை வாரந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா.
இதற்காக சில வக்கீல்கள் சிறை வளாகத்துக்குள்ளேயே எந்நேரமும் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் செய்த செயலால் கோபத்தில் இருக்கிறார் இளவரசி.
மன்னார்குடி கோஷ்டிகளுக்குள் இருக்கும் தகராறுகள் பெரும்பாலும் சொத்து குறித்துத்தான் அமைகின்றன. பெரும்பாலான நிதியை இளவரசி குடும்பம் வசம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பதை அவர்களில் பலர் விரும்பவில்லை.
ஜெயலலிதா வாங்கிப் போட்ட சொத்துக்களும் பெரும் செல்வங்கள் குறித்த ரகசியங்களை இளவரசியும் அறிவார். ஆதலால், அந்தக் குடும்பத்தைப் பகைத்துக் கொள்ளவும் சசிகலாவுக்கு எண்ணமில்லை.
அதனால்தான் எதுவென்றாலும் இளவரசி வாரிசுகளையும் அமர வைத்தே பேசுகிறார். அதிலும், 2011 தேர்தலுக்குப் பிறகு சில காலம் போயஸ் தோட்டத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் சசிகலா.
அந்த நேரத்தில் இளவரசி குடும்பத்துக்கு ஜெயலலிதா எந்த கெடுதியும் செய்யவில்லை. எனவே, தன்னைவிட இளவரசி குடும்பத்தினர் ஜெயலலிதா மீது உரிமை கோருவார்கள் என நினைத்தார் சசிகலா.
அதற்கேற்ப, வளைகாப்புப் படங்களை எல்லாம் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா. இவையெல்லாம் தினகரனின் கண்களை உறுத்தத் தொடங்கியது.
இளவரசி குடும்பத்துக்கு எதிராக பலகட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் சிறை வளாகத்துக்குள் இந்த மோசடி நடந்திருக்கிறது எனப் பேசுகின்றனர் இளவரசியின் ரத்த சொந்தங்கள்.
' சிறை வாழ்க்கை இளவரசி உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சிறைக்குள் வீட்டு உணவுகள் கொண்டு வரப்பட்டாலும், எப்போது வெளியில் போவோம்' என நினைக்கிறாராம். போதாக்குறைக்கு பேரன்களோடு தீபாவளியைக் கொண்டாடியதால், அவர்கள் நினைவும் இளவரசியை வாட்டுகிறது.
மாதம் இரண்டு முறை சொந்த பந்தங்களை சிறையில் சந்தித்தாலும், இளவரசிக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக சிலரை நியமித்திருந்தார் விவேக். இந்த நபர்களில் சிலர் தினகரனுக்கும் வேண்டப்பட்டவர்கள். இவர்கள் மூலமாகத்தான் மருந்து, மாத்திரைகள், உணவுப் பொருள்களை வாங்கி வரச் சொல்வார் இளவரசி.
இதற்காக, குறிப்பிட்ட ஒரு நபரின் கணக்கில் பல லட்ச ரூபாய்களைப் போட்டு வைத்திருந்தனர். அந்த நபரும், 'இதை வாங்கிக் கொடுத்தேன், அதை வாங்கிக் கொண்டு சென்றேன்' எனப் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டிவிட்டார். அது எவ்வளவு பெரிய தொகை என்பதைச் சொல்வதற்குத் தயங்குகின்றனர் இளவரசி சொந்தங்கள்.
அந்த நபரைப் பழிவாங்கினால் வெளியில் தெரிந்துவிடும் என்பதால், எச்சரித்து அனுப்பிவிட்டனர். 'இப்படிப்பட்ட ஆட்களை எப்படி நம்புவது, யார் சொல்லி அந்த ஆள் அப்படிச் செய்தார்' என சத்தம் போட்டாராம் இளவரசி.
- அருள் திலீபன்