அரசு ஊழியர்கள் 4-ந் தேதி வேலை நிறுத்தம்- ஜாக்டோ ஜியோ
தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 4ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் தமிழக அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்றுவதாக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த 7 அம்ச கோரிக்கைகளில் முக்கியமான புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதாகும். இந்த கோரிக்கைகளுக்கு தற்போது வரை தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆகவே, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வருகிற 4ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய வேலை நிறுத்தம் தமிழக அரசுக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றைய தலைமை செயலக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செங்கோட்டையன் உட்பட மூன்று அமைச்சர்கள் பங்குபெறுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.