வைகோவை வரவழைத்து வெச்சு செய்த ஸ்டாலின், துரைமுருகன் அண்ட் கோ- Exclusive
திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேட்டி தர குய்யோ முறையோ என கூப்பாடு போட்டார் வைகோ. திமுக கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வைகோ பேட்டி அளித்தார்.
இந்த இரு பேட்டிகளும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்த நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து வைகோவும் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இது தொடர்பாக துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோரிடம் முதலில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, வைகோவுக்கு நேரம் கொடுத்துவிடுங்கள்... இப்போது அவரை கழற்றிவிட்டால் நம்மை டேமேஜ் செய்துவிடுவார். தேர்தல் நேரத்தில் ஒரு சீட் கொடுப்போம். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரது விருப்பம். அந்த நேரத்தில் கூட்டணியில் இருந்து வைகோ விலகவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் அதிகபட்சமாக தேர்தலை புறக்கணிப்பார்.. அதனால் நமக்கு பாதிப்பு இருக்காது என கூறியிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்தே வைகோவை சந்திக்க ஸ்டாலின் நேரம் ஒதுக்கி கொடுத்தார். இந்த சந்திப்புக்கும் கூட துரைமுருகன் முதலில் வரமறுத்துவிட்டாராம்.
ஆனால் ஸ்டாலின்தான், வைகோவை நீங்கதான் சமாளிக்க முடியும்... என துரைமுருகனை வற்புறுத்தினாராம். இதனையடுத்து அறிவாலயம் வந்த வைகோவிடம், நீங்க இப்ப கூட்டணியில் இல்லைதானே.. நட்பாதானே இருக்கிறோம். கூட்டணி என்பது தொகுதி பங்கீடு முடிந்த பின்னர்தானே.. இதைத்தான் நான் பேட்டியில் கொடுத்தேன்.. மீடியாக்கள்தான் திரித்து எழுதுகின்றன என நாசூக்காக துரைமுருகன் பேசியிருக்கிறார்.
இதற்கு பதில் எதுவும் பேச முடியாத வைகோ, சரி தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என தலையாட்டிவிட்டு வந்துவிட்டார். அதே நேரத்தில் கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த போன நம்ம தலைவரை இப்படி வெச்சு செஞ்சுட்டாங்களே என குமுறுகின்றனர் மதிமுக நிர்வாகிகள்.
- எழில் பிரதீபன்