மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸை பரப்பிய கணவர்..அதிர்ச்சி தகவல்!
புனேவில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தனது மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே பிம்பிள் சவுதாகர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். சோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் அளித்தார். அதில், தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை தர முடியாததால் கணவர் விவாகரத்து கேட்டதாகவும் கூறியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் ஹோமியோபதி மருத்துவரான தனது கணவர் காய்ச்சலுக்கு ஊசி போடுகிறேன் என கூறி அதில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த இளம் பெண்ணின் கணவரிடமும், அவரின் எய்ட்ஸ் பாதிப்பு பற்றி மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.