கஜா புயல்: ப்ளீச்சிங் பவுடர் காண்ட்ராக்ட் யாருக்கு? கோட்டையில் மோதிக் கொண்ட அமைச்சர்கள் Exclusive
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கான காண்ட்ராக்ட் விவகாரத்தில் அமைச்சர்கள் மோதிக் கொண்ட சம்பவம்தான் கோட்டையில் இப்போது ஹாட் டாபிக்.
கஜா புயலால் உருக்குலைந்து போன டெல்டா மாவட்டங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் ப்ளீச்சிங் பவுடரை டெண்டரே இல்லாமல் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த அடிப்படையில் தமக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கே ப்ளீசிங் பவுடர் காண்ட்ராக்ட் தர வேண்டும் என கொங்கு அமைச்சர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் இது எங்க துறைதான்... தமக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனம் இருக்கிறது; அவர்கள் குறைவான தொகையில் முடித்து தருவார்கள்.. அவர்களுக்கே கொடுத்துவிடுங்கள் என முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் மற்றொரு அமைச்சர்.
இரண்டு அமைச்சர்கள் இப்படி போட்டி போட்டுக் கொண்டிருக்க இது தொடர்புடைய மற்றொரு துறை அமைச்சர் தலையை நீட்டியிருக்கிறார்.. இது என்னுடைய துறைதான்... நான் பார்த்து காண்ட்ராக்ட் கொடுத்துவிடுகிறேன்.. மற்றவர்களை தலையிட வேண்டாம் என சொல்லி விடுங்கள் என முதல்வர் எடப்பாடியாரிடம் கறார் காட்டியிருக்கிறார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என தவியாய் தவிக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் இப்படி காண்ட்ராக்ட்டுக்காக அடித்துக் கொள்கிறார்களே என கோட்டை வட்டாரங்கள் அதிர்ந்து போயிருக்கின்றன.
- எழில் பிரதீபன்