புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் நார்வேயில் உயிருடன் இருக்கிறார்- கருணா பரபரப்பு தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளருமான பொட்டு அம்மான் உயிருடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கருணா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இரு சிங்கள போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு கருணாதான் பொறுப்பு என சிங்கள ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் ரிவிர எனும் சிங்கள பத்திரிகைக்கு கருணா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், இலங்கை ராணுவம் கூறுவதைப் போல பொட்டு அம்மான் யுத்தத்தில் உயிரிழக்கவில்லை.
அவர் நார்வேயில் தலைமறைவாக இருந்து வருகிறார். மட்டக்களப்பில் 2 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை. விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார்.
பாஜகவின் ராஜய்சபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில், இத்தாலியில் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியிருந்த நிலையில் பொட்டு அம்மான் உயிருடனே இருக்கிறார் என கருணாவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.