மாநில அரசின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து! வைகோ அறிக்கை

மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் “தொழிற்திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:சுற்றுச்சூழல் குறித்த பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை கலந்தாலோசித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) வழங்கி திட்டத்தை “இயக்குவதற்கான அனுமதியை“ வழங்கும் (consent to operate). பெருந்தொழில் திட்டங்களை அனுமதிப்பதில் மாநில அரசுக்கும், மக்களுக்கும் ஓரளவு கட்டுப்பாடு இருந்தது.

மாநிலங்களுக்கான அந்த உரிமையைப் பறித்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்து சுற்ற்றிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதில், இனி மத்திய சுற்றுச்சூழல் வழங்கும் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) மட்டுமே போதுமானது என்றும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் “தொழிற்திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to Establish) தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கும் நிபந்தனைகளும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் நிபந்தனைகளும் ஒன்றாகவே இருப்பதால், மாநில அரசின் அனுமதி அவசியமில்லை என அனைத்து மாநில அரசு மாசுக் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக “திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to establish)-ஐ வழங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு விரும்பும் தொழிற்திட்டங்களை அதன் பாதிப்பு குறித்து அக்கறை கொள்ளாமல் மக்கள் மீது திணிக்கவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசுகளை மதிக்காமல் புறந்தள்ளவும் இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இது இந்திய அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளுக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் எதிரானதாகும்.

தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை நாசமாக்கி, தேனி மாவட்டத்தை அழிவுக்கு ஆளாக்கும் அபாயம் நிறைந்த நியூட்ரினோ திட்டத்தையும், தூத்துக்குடி நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையையும் இயங்க வைப்பதற்கும், கார்ப்ரேட் கம்பெனிகள் விருப்பப்படி ஆலைகள் நிறுவுவதற்கும் வழிவகுத்து மத்திய அரசு இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறது. ஆகவே , தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

More News >>