சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? - டிடிவி தினகரன் பதில்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாத்தின்போது திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் பேசினார். அப்போது, 111 சட்டமன்ற உறுப்பிர்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் இந்த ஆட்சிக்கு பெரும்பான்மையில்லை என்றார்.
அப்போது, குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டதால் அந்த இடம் காலி என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். அந்த எண்ணிக்கையை கழித்துவிட்டு பார்த்தால் இந்த அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றார்.
பின்னர், தொடர்ந்து பேசிய அன்பழகன், அந்த 18 உறுப்பினர்கள் விரைவில் பேரவைக்கு வருவார்கள். அப்போது இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, “18 எம்எல்ஏக்களின் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வரவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் பதவி கிடைத்துவிடும் என்று இவருக்கு எப்படி தெரியும்? இதிலிருந்தே திமுகவுடன் தினகரன் கூட்டு வைத்திருப்பது தெரிகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்க டிடிவி தினகரன் பல முறை வாய்ப்பு கேட்டார். ஆனால், பேரவைத் தலைவர் ப.தனபால் அனுமதிக்கவில்லை. இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இது பெரும்பான்மை அரசு என்றும் அமைச்சர் கூறியதற்கு பதில் அளிக்க முயன்றபோதும் வாய்ப்பு தரவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து பேச முயன்றபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே வெளிநடப்பு செய்தேன்” என்றார்.