அன்புமணி நடத்திக் காட்டிய சாதனை இது - ஓர் அரசு மருத்துவமனைக்காக நடந்த போராட்டம்

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் பத்தாம் ஆண்டு தொடக்க விழா நேற்று (30.11.2018) நடந்தது.

இந்த மருத்துவக் கல்லூரி, தர்மபுரியின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்குகிறது. பொருளாதாரப் பின்தங்கிய நிலை காரணமாக மருத்துவச் செலவு என்பது இந்த மாவட்ட மக்களுக்கு எளிதில் செய்ய முடியாத பெரிய செலவாகும். இந்த மாவட்ட மக்கள் மேல் சிகிச்சைப் பெற வேண்டுமென்றால் சேலம், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இன்று அது மிகவும் குறைந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இதைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் பா.ம.க முன்னாள் டாக்டர். செந்தில். அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. 385 படுக்கைகள் கொண்ட 35 மருத்துவர்களும், 62 செவிலியர்களும் செய்த மருத்துவமனையாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

இன்று தர்மபுரி அரசு மருத்துவமனை 816 படுக்கைகள் வசதி கொண்ட மிகப்பெரும் மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. 195 மருத்துவர்களும் 262 செவிலியர்களும் இங்கே பணிபுரிகிறார்கள். இன்று இந்த மருத்துவமனையில் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சைப் பெறுகிறார்கள். ஓராண்டுக்கு சற்றேழத்தாழ 40000 உள்நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு மாதத்தில் சராசரியாக 800 பிரசவங்கள் இங்கு நடைபெறுகின்றன. மாதத்திற்கு சராசரியாக 500 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. முழுவதும் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் கொண்ட அறுவைச் சிகிச்சை அரங்குகள் இருக்கின்றன. அது மட்டுமன்றி மகப்பேறு மருத்துவத்திற்கென தனி வளாகம் அமைக்கப்பட்டு, மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு என பிரத்தியேக அறுவை அரங்குகளும் இருக்கின்றன.

ஆண்டொன்றுக்கு 100 மாணவர்கள் எம்பிபிஎஸ் பட்டப் படிப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வருகிற கல்வி ஆண்டில் இருந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் சிறப்பு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் நான்கும், கண் சிகிச்சை மேற்படிப்பு இடங்கள் நான்கும் தொடங்கப்பட இருக்கின்றன.

விரைவில் அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மகப்பேறு மருத்துவ மேல்படிப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. தர்மபுரி மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தர்மபுரி மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி இங்கே மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வரவு செலவு அறிக்கை தயாராகி வரும் நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நானும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு இல. வேலுசாமி அவர்களும் அளித்தோம்.

தொடர்ச்சியாக, அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர்களையும் சந்தித்து வலியுறுத்தினோம். இந்த முயற்சிகளின் காரணமாக 2007 - 2008 ஆம் ஆண்டு தமிழக மாநில வரவு-செலவு அறிக்கையில் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட சில மாவட்ட மருத்துவ கல்லூரிகள், போதிய நிலம் இல்லாத காரணத்தாலும், பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காரணமாகவும் அறிவிப்பு நிலையிலேயே இருந்தன. ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி, வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உடனேயே, கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்குக் காரணம் அன்று மாவட்ட ஆட்சியராக இருந்த திரு பங்கஜ் குமார் பன்சால் அவர்கள். மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்றால் மருத்துவமனை இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக கல்லூரி அமைப்பதற்கான 25 ஏக்கர் நிலம் வேண்டும். இந்த அமைப்பு பல மாவட்டங்களில் இல்லை. ஆனால் தர்மபுரி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் இருந்தது. திரு பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் முழு முயற்சி செய்து வனத்துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை மருத்துவக் கல்லூரிக்காகக் கையகப்படுத்தினார். உடனடியாக 100 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு புதிய மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன.

மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான முன்வரைவு மாநில அரசால் விரைவாகத் தயாரிக்கப்பட்டது. மாநில அரசு, தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் உறுப்புக் கல்லூரியாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான முன்வரைவை மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கு அனுப்பியது. அப்போது மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தார். வழக்கமாக மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மாதக்கணக்கிலும், சில சமயங்களில் ஆண்டுக் கணக்கிலும் ஆகும்.

ஆனால் அன்புமணி இந்த விண்ணப்பத்தை ஒரே மாதத்தில் பரிசீலித்து, இந்திய மருத்துவ கழகம், தர்மபுரி மருத்துவ கல்லூரி அனுமதிக்கான ஆய்வு நடத்த ஆணையிட்டார். இந்தியாவில் எங்கும் நடந்திராத அதிசயமாக மாநில அரசு வரவு செலவு அறிக்கையில் மருத்துவ கல்லூரி அமைப்பதாக அறிவித்தவுடன், மிக விரைவாக நிலம் கையகப்படுத்தப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டு, மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, விண்ணப்பம் மாநில அரசால் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, நடுவன் சுகாதாரத் துறையால் பரிசீலிக்கப்பட்டு, இந்திய மருத்துவ கழகம் ஆய்வு செய்து, அறிக்கை நடுவன் சுகாதார அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டது, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியால் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஆணை ஏறக்குறைய ஓரே ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று இந்த அளவுக்கு முனைப்புக் காட்டியதற்குக் காரணம் தர்மபுரி மாவட்டத்திற்கு, மருத்துவ மாணவர்கள் படிக்கும் மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும் என்பது அல்ல. அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தான்.

இன்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், அருகிலுள்ள ஆந்திராவைச் சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுப் பயன் பெறுகிறார்கள். சிறந்த மருத்துவர்களும் கடமையுணர்வு உள்ள பணியாளர்களும் இந்த மருத்துவமனைக்கு நற்பெயரை உருவாக்கியிருக்கிறார்கள்.

மருத்துவச் சேவை என்பது மூன்று அடுக்குகளாக இருக்கின்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அடுக்காகவும், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் இரண்டாம் அடுக்காகவும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூன்றாம் அடுக்காகவும் இருக்கின்றன.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இறுதி அடுக்கு. இதன் பொருள் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை \எங்கும் அனுப்பக்கூடாது என்ற அளவுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனையாக இருக்க வேண்டும் என்பதே.

தர்மபுரி நகரம் தேசிய நெடுஞ்சாலை எண் 7 அருகில் அமைந்திருக்கிறது.

இந்த நெடுஞ்சாலை இந்தியாவிலேயே வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கிற நெடுஞ்சாலை. இங்கே எண்ணற்ற விபத்துகள் நடக்கின்றன.

இன்னமும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த விபத்து மற்றும் தலைக் காயப் பிரிவு நிறுவப்படவில்லை. தலைக் காயம் பட்டவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அனுப்பப்படுகிறார்கள். நவீன வாழ்வில் இதய நோய்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவும் இன்னமும் துவக்கப்படவில்லை. புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சிறுநீரகவியல் நோய்ப் பிரிவும் இல்லை. தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டு இருதய நோய்ப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும், ஒருங்கிணைந்த விபத்து மற்றும் தலைக்காயப் பிரிவு, புற்றுநோய்ப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர்.செந்தில்.

 

More News >>