கஜா புயல் பாதிப்பு: ரூ.353 கோடி நிவாரண நிதி ஒதுக்கியது மத்திய அரசு
கஜா புயல் பாதிப்பிற்காக இரண்டாம் கட்டமாக ரூ.353 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கஜா புயல் கடந்த 16ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதன் எதிரொலியால், நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகியும் பல மாவட்டங்களிலும் இன்னமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளும், விவசாய நிலங்களையும் அடியோடு அழித்த கஜா புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடிழ பழனிசாமி பிரதமரை சந்தித்து, கஜா புயலின் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். மேலும், சீரமைப்பு பணி உள்பட ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.
இதன்பிறகு, தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவினர் கஜா புயலால் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு செய்தனர். இதன் முதற்கட்ட ஆய்வறிக்கை குழு மத்திய அரசிடம் அளித்தனர்.
பின்னர், கஜா புயல் பாதிப்பிற்காக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிவாரண நிதியை ஒதுக்கியது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக தமிழகத்திற்கு ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.