ரூ13,000 கோடி மோசடி- இந்தியாவுக்கு திரும்பினால் அடித்தே கொலை செய்துவிடுவார்கள்... நீரவ் மோடி கதறல்
தாம் இந்தியாவுக்கு திரும்பினால் அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி கடன் பெற்று தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்தனர் என்பது வழக்கு. இந்த மோசடி அம்பலமாவதற்கு முன்னரே இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து நீரவ் மோடியின் ரூ3,000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.
நீரவ் மோடி மீது மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஒரு விளக்க கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், என் மீது கூறப்படும் புகாருக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டவில்லை. நேரில் ஆஜராகுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அனுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் மட்டுமே அளிக்கும் நிலை உள்ளது.
என்னை பற்றி தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது. எனது உருவ பொம்மைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் மக்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற நிகழ்வு எனக்கு நேரலாம். ஆகையால் பாதுகாப்பு காரணங்களுக்காவே நேரில் வர தயக்கம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.