இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இன்று நள்ளிரவு வாபஸ்! பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கம்?
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்று நள்ளிரவு வாபஸ் பெறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு ராஜபக்சே அப்பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால் ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் மைத்திரிபால சிறிசேனா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த ஆலோசனைகளின் முடிவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாக உள்ளது.
மேலும் வரும் 5-ந் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கப்பட இருக்கிறார். புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதே நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஏற்கவே முடியாது என்பதில் மைத்திரிபால சிறிசேனா உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.