விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லவே இல்லை..அடித்து சொல்லும் இலங்கை ராணுவ தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை; அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கருணா, நார்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, இத்தாலியில் புலிகளின் தலைவர் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறியிருந்ததை உறுதிப்படுத்துவதாக கருணா பேட்டி இருந்தது.
ஆனால் கருணா பொய் கூறுவதாக இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தில் புலிகளின் தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். நந்திக் கடல் பகுதியில் ஏராளமான புலிகள் இயக்க தலைவர்களின் சடலங்கள் புதைந்து கிடந்தன.
அவற்றில் ஒன்றுதான் பிரபாகரனின் சடலம், நந்திக் கடல் பகுதியில் இருந்து யாரும் தப்பிச் செல்ல வாய்ப்பு இல்லை. கருணா அரசியலுக்கு வந்த பிறகு பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.
இலங்கையில் குழப்பம் ஏற்படுத்தவே கருணா இப்படி பொய் கூறுகிறார். பொட்டு அம்மன் உயிருடன் இல்லை என்பதை புலனாய்வுத்துறை தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இவ்வாறு கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.