டிராய் உத்தரவுக்கு பணிந்தது ஆப்பிள்: டிஎன்டி செயலிக்கு அனுமதி

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவினை ஏற்று தனது இயங்குதளத்தில் ஆணையத்தின் செயலி இயங்குவதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை தடுக்கக்கூடிய Do Not Disturb என்னும் செயலி 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கானது வெளியிடப்பட்டது. இந்தச் செயலி, தங்கள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையை மீறுவதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தனது அலைபேசிகளில் இச்செயலிக்கு அனுமதி மறுத்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் டிராய், தங்களிடம் பதிவு பெற்றுள்ள அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள் டிஎன்டி செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. அச்செயலிக்கு அனுமதி வழங்காத பட்சத்தில் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள தங்களது கோடிக்கணக்கான ஸ்மார்ட் போன்கள் பயனற்றவையாக போகும் என்ற அபாயத்தை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது டிஎன்டி செயலிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்ட மேம்படுத்தல்கள் டிராயின் டிஎன்டி செயலியில் செய்யப்பட்டுள்ளனவா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

தேவையற்ற, தொந்தரவு தரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து, அவை தொடர்பான சேவை நிறுவனங்களுக்கு புகார் செய்யக்கூடிய TRAI DND - Do Not Disturb செயலியை ஆப்பிள் ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 9.1 எம்பி அளவு கொண்ட இந்தச் செயலி ஐஓஎஸ் 12.1 என்ற இயங்குதளத்தில் பயன்படக்கூடியது.

தனது மேம்படுத்தப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் பயன்படக்கூடிய டிஎன்டி செயலியை ஆப்பிள் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. டிராயின் டிஎன்டி செயலியில் பதிவு செய்யும் பயனர்கள் கட்டணமில்லாத சேவை toll free எண்ணுக்கு தேவையற்ற தொடர்பு நிறுவனங்களை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதன் பின்பு செயலி, செயல்பாட்டுக்கு வருவதற்கு ஏழு நாட்கள் வரை காலம் தேவைப்படும். ஆப்பிள் வெளியிட்டுள்ள செயலியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஐஓஎஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

More News >>