ஓய்வுபெற்ற பேருந்து ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் ரூ.750 கோடி வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், முதற்கட்டமாக ஓய்வுபெற்ற பேருந்து ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஓய்வூதிய நிலுவ¬த் தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்றுடன் ஏழாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுடன், அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து, 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடுசெய்வதற்கு ஏற்ப நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின.
இச்சூழ்நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011ம் ஆண்டு முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி உள்ளது. மேலும், அரசு பொது மக்களின் நலன் கருதி போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட 5138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கி உள்ளது. 2017&2018ம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.750 கோடி ரூபாயினை அரசு வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளரகளுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2147.39 கோடி ரூபாபய் வழங்கி உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாலளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறினார்.