இனி அரசு பள்ளிகளிலும் ப்ரிகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளிலும் ப்ரிகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆனால், தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் பிளே ஸ்கூல், ப்ரீகே.ஜி, எல்கேஜி போன்ற வகுப்புகள் அரசு பள்ளிகளில் இருந்ததில்லை.

குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆனால் போதும், பிளே ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால், அரசு பள்ளிகளில் 5 வயது ஆகும்போதுதான் முதலாம் வகுப்பிற்கு சேர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ப்ரீகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி செம்மம் பாளையத்தில் உள்ள கால்நடை கிளை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது: இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கோழி வளர்ச்சி திட்டம், கால்நடை பசுந்தீவன திட்டம், கால்நடை காப்பீடு திட்டம், விலையில்லா ஆடுகள் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும்.பள்ளி கல்விதுறையில் மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனவரி 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ப்ரீகேஜி. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இலவச சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>