தலிபான்களின் தளபதி பலி - ஆப்கானில் வான்வழித் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கான் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்க படைகள் சனிக்கிழமை அன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். அதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லபட்டார் எனக் கூறிவருகின்றனர்.
மேலும், இத்தாக்குதல் ஆப்கானிஸ்தான் தென் பகுதியில் தாலிபன்கள் பதுங்கியிருக்கும் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடைபெற்றது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகமது யசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அப்துல் மனனின் மரணம் குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.
அரசுக்கு எதிராக தீட்டப்பட்ட பல சதித்திட்டங்களில் முக்கியப் பங்கி வகித்தவர்அப்துல் மனன். அவரின் மரணம் தலிபான்களுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை தலிபான்களின் பிடியில் இருந்து மீட்டது. எனினும் தலிபான் தீவிரவாதிகள் ராணுவத்தினர், போலீஸாரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.