தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டமாக்குவேன்... வேல்முருகன் பேச்சால் கொந்தளிக்கும் பாமக

தாம் ஜாதிய அரசியலை கையில் எடுக்க நினைத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் காணாமல் போய்விடுவார்; தைலாபுரம் தோட்டத்தை அரை மணிநேரத்தில் தரைமட்டமாக்குவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்திகள் பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வேல்முருகனை கடுமையாக பாமகவினர் விமர்சித்து வருகின்றனர்.

 

பாமகவில் இருந்து விலகிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நடத்தி வருகிறார். ஜாதிய அரசியலை கையில் எடுக்காமல் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராட்டங்களை அவர் முன்னெடுத்து வருகிறார்.

100-க்கும் மேற்பட்ட பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பையும் வேல்முருகன் உருவாக்கியுள்ளார். அண்மையில் 7 தமிழர் விடுதலைக்கான மிதிவண்டி பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை பங்கேற்க வைத்ததன் மூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அத்துடன் காடுவெட்டி குரு குடும்ப விவகாரத்தில் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காடுவெட்டி குரு பேரரசனைப் போல் வாழ்ந்தவர்; அவரது குடும்பத்தை இப்படி ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்குகிறார்களே... என கொந்தளித்திருந்தார் திருமால்வளவன்.

இதே காலகட்டத்தில் தாம் ஜாதிய அரசியலை கையில் எடுத்தால் ராமதாஸ் காணாமல் போவார்; தாம் நினைத்தால் தைலாபுரம் தோட்டத்தை அரைமணிநேரத்தில் தரைமட்டமாக்குவேன் என வேல்முருகன் கூறியதாக செய்திகள் வெளியாகின. இது பாமகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் வேல்முருகனை கடுமையான சொற்களால் பாமகவினர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பதிலடி கொடுப்பதால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

More News >>