டெல்லியில் டிச.10ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
டெல்லியில் வரும் 10-ந் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸை உள்ளடக்கிய பிரமாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முதலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்கிற முழக்கத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்னெடுத்தார். ஆனால் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி என்கிற முழக்கத்துடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு களமிறங்கினார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்தார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.