டெங்கு காய்ச்சல் பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி

டெங்கு காய்சசலால் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக, மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருந்தது.

காய்ச்சலின் அறிகுறி தெரிந்ததும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சென்னை எண்ணூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை எண்ணூர் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

More News >>