நீதிமன்றம் தலையீடு- தமிழக அரசு ஊழியர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான பெஞ்ச் முன் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது அரசுக்கு தெரியும் எனக் கூறிய நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது போராட்டததை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைவிட வேண்டும் அல்லது இரு நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீபதிகளின் அறிவுரையைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.