திருவாரூர் அரசு மருத்துவமனையில் அலட்சியம்: பிரவசத்தின்போது வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த டாக்டர் மீது புகார்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கையுறை வைத்து தைத்ததாத அரசு மருத்துவமனையின் டாக்டர் மீது புகார் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே உள்ள தைக்கால் காலனித் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், கார்த்திகா இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.
இந்நிலையில், கார்த்திகாவின் இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட கார்த்திகாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதன் பிறகு, கார்த்திகா வீடு திரும்பினார். ஆனால், கார்த்திகாவிற்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது பிரசவத்தின்போது தவறுதலாக வயிற்றுக்குள் கையுளை வைத்து தைத்தது தெரியவந்துள்ளது.
இதன்பிறகு, கார்த்திகாவிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அதன் மூலம் கையுறை அகற்றப்பட்டது.
இருப்பினும், கார்த்திகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்திகாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கார்த்திகாவின் கணவர் ஆனந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார்.இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.