விடிய விடிய கனமழை எதிரொலி: 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 8 கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, எண்ணூர், திருவொற்றியூர், பெரியபாளையம், கும்மிடிபூண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இங்கு அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ., மழையும், கும்மிடிப்பூண்டியில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல், சிவகங்கையில், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் நேற்று மாலை முதலே பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவிலும் தொடர்ந்து கனமழை நீடித்தது. தற்போது, ஆங்காங்கே தூரல் மழை பெய்து வருகிறது. 

More News >>