தீபக் மிஸ்ரா ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டார்: குரியன் ஜோசப் பரபரப்பு புகார்
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புற சக்திகளால் 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
" முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புறத்தில் இருந்து வந்த சில சக்திகளுக்கு மத்தியில் பணியாற்றினார். வெளிப்புறத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் நீதிபதி தீபக் மிஸ்ரா இயக்கப்பட்டார். நீதித்துறையின் நிர்வாகத்திலும் அந்த வெளிப்புறச் சக்தியின் தாக்கம் இருந்தது. இதை உணர்ந்துதான் கடந்த ஜனவரி மாதம் நான் உள்பட 4 நீதிபதிகளும் தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் பேட்டி அளித்தோம்.
இதைத் தொடர்ந்து நான் உள்ளிட்ட 4 நீதிபதிகள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையை நீதிபதி தீபக் மிஸ்ரா கண்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். அதன் பிறகு, தற்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் காலத்திலும் அந்த நடவடிக்கை தொடர்கிறது" என நேற்று அளித்த பேட்டியில் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஆனால், யார் அந்த வெளிப்புறச் சக்திகள்?, எந்த குறிப்பிட்ட வழக்கில் தாக்கம் இருந்தது என்பதை குரியன் ஜோஸப் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோஸப் கூறிய புகார் குறித்து விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இதுபற்றி உடனடியாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். நீதித்துறையின் உண்மைச் சூழலை தேசம் அறிய வேண்டும். மத்திய அரசு சட்டவிரோதமாக சில முயற்சிகள் செய்வதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.