உ.பி யில் போலீஸ் அதிகாரி அடித்து கொலை: 2 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது இன்ஸ்பெக்டர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை சமாதனப்படுத்த முயன்றனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸார்களை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தினர். அருகில் இருந்த காவல் நிலையங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது.

சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More News >>