வேல்முருகனை விமர்சிப்பதா? அன்புமணி மகள் விவகாரத்தை சந்திக்கு கொண்டு வந்த தவாக
தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டாக்குவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பாமகவுக்கும் தவாகவுக்கும் இடையேயான சமூக வலைதள மோதல்கள் உக்கிரத்தை அடைந்துள்ளன.
பாமகவில் இருந்து வேல்முருகன் வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கிய போதும் இருதரப்புக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. வேல்முருகனை கொலை செய்ய ஊர்க்கூட்டம் கூடி ஆலோசித்த தகவல்களும் வெளியாகி இருந்தன.
தற்போது காடுவெட்டி குருவின் குடும்ப பிரச்சனையை முன்வைத்து தவாக-பாமக இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது வடதமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டமாக்குவேன் என வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தி பாமகவினரை கடும் கோபப்படுத்தியுள்ளது. இதனால் வேல்முருகனை கடுமையாக விமர்சித்து வருகிறது பாமக தரப்பு.
சமூக வலைதளங்களில் பாமகவினர் எவ்வளவு கடுமை காட்ட முடியுமோ அவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அன்புமணியின் குடும்ப விவகாரத்தை சமூக வலைதளங்களில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.