சொத்து பிரச்னை- உச்ச நீதிமன்றத்தை நாடிய நடிகை வனிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு !
தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் தனியாக வசித்து வரும் நடிகை வனிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளும், நடிகையுமான வனிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு நீடித்து வருகிறது. சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பங்களாவை மூன்று நாட்கள் விளம்பர ஷூட்டிங்கிற்காக வாடகை எடுத்தார். இதன்பிறகு, ஷூட்டிங் முடிந்தும் வனிதா பங்களாவைவிட்டு வெளியேறவில்லை. இதுகுறித்து கேட்ட போது வனிதா ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அடியாட்களை கொண்டு பங்களாவில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதையடுத்து, நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் வனிதாவையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நடிகை வனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் போலீஸ் விசாரணை ஒருதலை பட்சமாக இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கன்வீல்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து மனுதாரர் வனிதாவுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.