திருச்சி திணறியது...மேகதாது அணைக்கு எதிராக திமுக, தோழமை கட்சிகள் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கஜா புயல் காவிரி டெல்டாவை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. கஜா புயலின் துயரத்தில் இருந்து தமிழகம் மீளாத நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை கண்டித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தின.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர்வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.