தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை

தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இதனால், நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோ மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடையும் என்றும் இதனால் வட மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் இது புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக, மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

More News >>