மீடூ விவகாரம்: டிசம்பர் 10-ல் மத்திய அமைச்சரவை கூடுகிறது
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மீடூ விவகாரம் குறித்து தீர்வு காண டிசம்பர் 10ந் தேதி மத்திய அமைச்சரவை கூடுகிறது.
இந்த அமைச்சரவைக் குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் தலைமையில் இயங்கும்.
முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவர் தனது பதவியை அக்டோபரில் ராஜினாமா செய்தார். அடுத்த சில நாட்களிலேயே உயர் மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இக்குழுவுக்கு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வழிமுறைகளை ஆராய 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே உள்ள சட்ட நடைமுறைகளை பலப்படுத்தவும் அமைச்சரவைக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மீடூ இயக்கம் மூலம் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஒருவர் மட்டுமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.