தோனியின் வழியை பின்பற்றுங்கள் - கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வழியை பின்பற்றுமாறு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை கூறினார்.
இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்துள்ளது. ஆகவே, ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் வழக்கமான ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும், களத்தில் ஸ்லெட்ஜிங் முதல், வார்த்தை மோதல் வரை இருக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி நேற்று அளித்த பேட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச அளவில இந்திய அணயின் தோற்றத்தையும், புகழையும் தனது கேப்டன்ஷிப் திறமையால் மாற்றியவர். களத்தில் எதிரணி தன்னை ஸ்லெட்ஜிங் செய்தாலும் மிகவும் 'கூலாக' அனைத்தையும் சமாளிக்கும் தன்மை கொண்டவர் தோனி. தோனியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே கோலிக்கு எளிதாக வெற்றி கிடைத்துவிடும்.
விராட் கோலியின் தனிமனித சாதனைகள் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை உணர்த்தும். வலை பயிற்சியில் என்ன விதமான ஆக்ரோஷத்தையும், நிதானத்தையும் கடைப்பிடிக்கிறாரோ அதை அப்படியே, களத்திலும் கோலியிடம் நான் பார்க்கிறேன் என்று அப்ரிடி கூறினார்.
மேலும், தோனி உடற்தகுதியுடனும், விளையாட விருப்பமும் இருந்தால், அவர் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்தார்