ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்ச வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை- ராமதாஸ்
சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது நீதிப் படுகொலை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்பாக ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது. அதில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய எழுவர் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதனடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாநகரக் காவல்துறையில், யாருடையப் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் தந்திரமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி எம்.எஸ்.இரமேஷ் அமர்வில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. இதுவரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த உண்மை, அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நீதிபதிகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப்படுகொலை ஆகும். அரசாங்க கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள்.... அதேபோல், ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக பெயர் குறிப்பிடப்படாமல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அதை ரத்து செய்யும்படி எவரும் கோர முடியாது. நரசிம்மன் என்பவர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்குக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவை அரசு வழக்கறிஞர் எழுப்பியிருக்க வேண்டும்; அவர் எழுப்பாத பட்சத்தில் நீதிபதி வினவியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அவ்வாறு செய்யாதது மிகவும் வியப்பளிக்கிறது.
வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதுமே, அதனடிப்படையில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக கூறியிருந்தது. அதன்படி, முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 அமைச்சர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், மூன்றாவது நபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இந்த வழக்கை ரத்து செய்ய வைத்திருக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் கடமை தவறுதலாகும்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீதி நிதிமுறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம்(சி.பி.ஐ) அரசு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.